கட்டுரை

வெல்வது யார்? டெல்லி பரபரப்பு!

முத்துமாறன்

பி ரதமர் மோடி சமீபத்தில் வாரணாசியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது தன்  கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்த்தார். இது ஊடகங்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

ராகுல் காந்தி வயநாட்டிலும் அமேதியிலும் குடும்ப உறுப்பினர் சகிதம் மட்டுமே போனார்.ஆனால் பாருங்கள் மோடி, தன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போய் பலத்தை நிரூபித்திருக்கிறார். வாரணாசியில் மதன்மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களில் மூத்தவரான 90 வயதான அகாலிதளம் தலைவர் காலில் விழுந்து ஆசி பெற்றது, கங்கை ஆரத்தியில் கலந்துகொண்டது என கோலாகலமாக தன் வேட்பு மனுத் தாக்கலை நிகழ்த்தினார் மோடி.

2014 -  தேர்தலின்போது இப்படி எல்லாம் இல்லை. தனியாகத்தான் போய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்தார். அன்றைக்கு இருந்த மோடிக்கும் இன்று இருக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம்?

காரணம் இருக்கிறது. தோற்கடிக்கவே முடியாத இணை என்று கருத்தப்பட்ட  மோடி -  ஷா ஜோடி, சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில
 சட்டமன்றத் தேர்தல்களில் தங்கள் ஆட்சியை நழுவ விட்டது. காங்கிரஸ் இங்கே ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 65 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன. இவற்றில் 2014 - ல் 61 இடங்களை பாஜக வென்றிருந்தது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்கு
சதவீதங்களின் அடிப்படையில் பார்த்தால் பாஜக இதில் பாதி இடங்களைத்தான் வெல்ல முடியும் என்று தோன்றுகிறது. பாஜக கவலைப்பட வேண்டிய இன்னொரு மாநிலம் குஜராத். அங்கே உள்ள 26 இடங்களையும் 2014 தேர்தலில் பாஜக வென்றிருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் (2017) காங்கிரஸ் தோற்றாலும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், அங்கே 2014 - ல் பெற்ற வெற்றியைத் திரும்பப் பெற முடியாது.

பாஜக எதிர்கொள்ளும் இன்னொரு பெரிய
 பஞ்சாயத்து உத்தரபிரதேசத்தில் உள்ளது. அங்குள்ள 80 இடங்களில் 71-ஐ பாஜகவும் இரண்டை கூட்டணிக் கட்சியான அப்னா தளமும் பெற்றன. ஆனால் இம்முறை அதற்கு எதிராக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆர்.எல்.டி கூட்டணி அமைந்துள்ளது. கடந்த முறை வென்றதில் பாதியை வெல்வதே சிரமம் என்று கருதப்படுகிறது. 
''மேற்சொன்ன மாநிலங்களில் பெற்றவற்றில் குறைந்தது 100 இடங்களாவது இழக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொள்கிறது,' என்று இந்தியா டுடே பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்த 100 இடங்களை நாட்டின் வேறு எந்த இடங்களில் இருந்தாவது இவர்கள் பெற்றாகவேண்டும்.

தெற்கே எடுத்துக்கொண்டால் கர்நாடகம், ஆந்திரா,  தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 130 இடங்களில் பாஜக 2014 தேர்தலில் 22 இடங்களை மட்டும் வென்றது. அதில் 17 இடங்கள் கர்நாடகாவில் கிடைத்தன. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களை வென்றிருந்தது. அந்தக் கட்சியும் இப்போது கூட்டணியை விட்டுச் சென்றுவிட்டது. இந்த  பகுதியில் பாஜக நம்பி இருப்பது அதிமுகவுடனான கூட்டணியை மட்டுமே. எனவே தான்  ஊழல் கட்சி என்று விளாசி வந்த அதிமுகவுடன் ஐந்து இடங்களுக்கு ஒப்புக்கொண்டு ஒரு பெரும் கூட்டணியை தமிழ்நாட்டில் கட்டமைத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தலில் பாஜக பெற்ற இடங்களை இம்முறை பெறுவதை சிரமம் ஆக்குகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜகவை விமர்சனம் செய்யத் தயங்குவதே இல்லை. இருப்பினும் அங்கே அக்கட்சியுடன் இறங்கிப்போய் பாஜகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். சென்ற தேர்தலில் கொடுத்த இடங்களைவிட மூன்று இடங்கள் சிவசேனாவுக்கு அதிகமாகக் கொடுத்து இழுத்து வைத்திருக்கிறார்கள்.

2014 - ல் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் 2 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. பாஜகவோ 22 இடங்களில்  வென்று இருந்தது. ஆனாலும் அங்கே தன் கூட்டணியை அமைக்கவேண்டும் என்பதற்காக, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சமமாகப் பாவித்து இரு கட்சிகளும் தலா 17 இடங்களில் போட்டியிடுகின்றன. மீதி ஆறு இடங்கள் சற்று முறுக்கிக் கொண்டிருந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன
சக்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளின் முக்கியத்துவத்தை எப்படி பாஜக உணர்ந்ததோ அதுபோல் காங்கிரசும் உணர்ந்து மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், பீஹாரில் ஆர்ஜேடி, மற்றும் பிற சிறு கட்சிகள், தமிழ்நாட்டில் திமுக மற்றும் பிற கட்சிகள் என்று இழுத்துப்பறித்து எதிர்முகாமை அமைத்துள்ளது. ஆம் ஆத்மியுடனான கூட்டணி அடிமடிக்கே ஆபத்து என்பதால் மட்டுமே அமையாமல் போயிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அங்கே 25 இடங்கள் உள்ளன. கடந்த 2014ல் பாஜக அங்கே எட்டு இடங்களைப் பெற்றிருந்தது. எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாம், திரிபுரா, மணிப்பூர்,  அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாகாலாந்து,மேகாலயாவில்  ஆளும் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸுக்கு
செல்வாக்கு இருந்தாலும் ஆட்சி இல்லை. இம்முறை பாஜக சுமார் 15  இடங்களையாவது அங்கே வெல்ல முடியும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் களயதார்த்தம் இதுதான். பாஜக பெறும் இடங்களில் நூறுக்கும் மேல் குறையும்போது, மாநிலங்களில் தனித்து நிற்கும் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 2014 தேர்தலில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி 42&ல் 34 இடங்களை வென்றார். ஒதிஷாவில் நவீன் பட்நாயக் 21&ல் 20 இடங்களை வென்றார். ஆந்திராவில் கடந்த தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் ஜகன்மோகன் ரெட்டி 9 இடங்களை வென்றிருந்தாலும் இந்த தேர்தலில் நிச்சயமாக அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்புடன் போட்டியிடுகிறார். இவர்கள் மூவரும் எந்த கூட்டணியிலும் இல்லை. அதேபோல் மாயாவதி, அகிலேஷும் காங்கிரஸை கழற்றிவிட்டுத்தான் உபியில் நிற்கிறார்கள்.

ஆகவே இம்முறை இந்த மாநிலத் தலைவர்களின் செல்வாக்கு மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். பாஜகவும் சரி; காங்கிரஸும் சரி தேர்தலுக்குப் பின்னர் இந்த கட்சிகளை நாடவேண்டி இருக்கலாம். பிரதமர் நாற்காலியில் அமர, சரத்பவார்
சொல்லியிருப்பதுபோல் மாயவதி, நாயுடு, மம்தா போன்றவர்களுக்கு வாய்ப்பு அடிக்கலாம். வேறு சில உள்ளடி வேலைகள் நடைபெற்று நிதீஷ்குமார் போன்றவர்களுக்கும் பச்சை சிக்னல் கிடைக்கலாம். ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் வட இந்திய மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் செய்தியாளர்கள் மோடி என்கிற மனிதரின் செல்வாக்கும் ஆதரவும் மக்கள் நடுவே குறையவே இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.  அவர் ஒரு வலிமையான அரசை அமைத்திருந்தார் என்பதை மக்கள் ஒப்புக்கொள்வதாக அவர்கள் எழுதுகிறார்கள். வேலை இழப்பு, விவசாயம் எதிர்கொண்ட நெருக்கடி ஆகிய பிரச்சனைகளுக்கு நடுவே பால்கோட் தாக்குதல் மோடிக்குக் கை கொடுத்துதான் இருக்கிறது.

இம்முறை பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமானால்,  அதற்கு இந்த விஷயம் கை
கொடுத்தால்தான் உண்டு. மற்றபடிக்கு மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் பிரகாசமாகத் தெரிகிறது!  சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றாலும் ம.ஜ.தளத்துக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புக் கொடுத்து பாஜகவுக்கு தடைபோட்டது. ஒருவேளை அது போலவும் நடக்கலாம்!

மே, 2019.